எஸ்ஏ20 2024: கைல் வெர்ரைன் சதம் வீண்; பிரிட்டோரியாவை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!

Updated: Fri, Feb 02 2024 09:33 IST
எஸ்ஏ20 2024: கைல் வெர்ரைன் சதம் வீண்; பிரிட்டோரியாவை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூயனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வேண்டர் டுசென் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 12 ரன்களோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ரிக்கெல்டனுடன் இணைந்த டெவால்ட் பிரீவிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய இருவரும் அரைசதங்களை கடந்து அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 90 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சாம் கரணும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த டெவால் பிரீவிஸ் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 66 ரன்களையும், கேப்டன் கீரென் பொல்லார்ட் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 27 ரன்களையும் குவித்தனர்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 248 ரன்களைக் குவித்தது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் கேப்டன் வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் 5 ரன்களிலும், வில் ஜேக்ஸ் 26 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய கைல் வெர்ரைன் ஒருமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய ரைலீ ரூஸோவ், காலின் அக்கர்மேன், ஷேன் டேட்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து நுவான் துஷாரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழக்க, டி பிரையன் 4 ரன்களுக்கும், கேப்டன் பார்னெல் 23 ரன்களிளுக்கும், ஈதன் போஷ் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் மறுபக்கம் அபாரமாக விளையாடிய கைல் வெர்ரைன் சதமடித்து அசத்தியதுடன், இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 116 ரன்களையும், ஆதில் ரஷித் 21 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் வெற்றியை ஈட்டமுடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை மட்டுமே எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி தரப்பில் நுவன் துஷாரா 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதமடித்த கைல் வெர்ரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை