எஸ்ஏ20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடரும் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோர்டன் ஹார்மனும் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய மிட்செல் வான் பியூரனும் 5 ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் வெல்லாலகேவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் அவர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் 15 ரன்களை எடுத்திருந்த வெல்லாலகே தனது விக்கெட்டை இழக்க, கேப்டன் டேவிட் மில்லார் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்தார். இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஜோ ரூட் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தாலும் 140 ரன்களை மட்டுமே எடுத்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் வில் ஜேக்ஸ், ஈதன் போஷ், சேனுரன் முத்துசாமி மற்றும் கைல் சிமண்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு வில் ஜேக்ஸ் ஒருபக்கம் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த நிலையில், மறுமுனையில் விளையடைய ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்னிலும், மார்கஸ் அக்கர்மேன் 2 ரன்னிலும், கேப்டன் ரைலீ ரூஸோவ் 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் மற்றும் கைல் வெர்ரைன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் வில் ஜேக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் கைல் வெர்ரைன் 30 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, ஜிம்மி நீஷம், கெகன் லையன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து 56 ரன்களில் வில் ஜேக்ஸும் விக்கெட்டை இழக்க கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. ராயல்ஸ் தரப்பில் பிஜோர்ன் ஃபோர்டுயின், மூஜீப் உர் ரஹ்மான், ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.