எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுனை 158 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஃப்ரான்சைஸ் லீக் தொடரான எஸ்ஏ20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய எம்ஐ கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்றும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வேண்டர் டுசென் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 13 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸும் நிதானமாக விளையாடி இரண்டாவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வேண்டர் டுசென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அவருடன் இணைந்து விளையாடிய ரீஸா ஹென்றிக்ஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்ஜ் லிண்டே 10 ரன்களுக்கும், டெவால்ட் பிரீவிஸ் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க அணியின் ஸ்கோர் வேகமும் குறையத்தொடங்கியது. அதுவரை நிதானமாக விளையாடி வந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் இறுதியில் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 91 ரன்களைச் சேர்த்து அணியை சவாலான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தாலும் 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ஜோ ரூட், தயான் கலீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்கை நோக்கி பார்ல் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.