SA20 League: ரோஸிங்டன், வெண்டர் மோர்வ் பங்களிப்பில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க தென் ஆபிரிக்காவில் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஆடம் ரோஸிங்டன் - ஜோர்டன் ஹெர்மான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
அதன்பின் 59 ரன்களில் ஹெர்மான் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 30 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்திருந்த ஆடம் ரோஸிங்டனும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 44 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மேத்யூ பிரீட்ஸ்கி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கைல் மேயர்ஸ் 11 ரன்களிலும், வியான் முல்டர் 29 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஹென்ரிச் கிளாசென், குயின்டன் டி காக், ஜேசன் ஹோல்டர், டுவைன் பிரிட்டோரியஸ், கீமா பவுல் என அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வெண்டர் மோர்வ் 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஈஸ்டர்ன் கேப் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.