SA20 League: மீண்டும் சன்ரைசர்ஸை வீழ்த்திய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
தென் ஆப்பிரிக்கவின் எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று செஞ்சூரியனில் நடிபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய ரைலீ ரூஸோவும் 20 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனௌயில் அதிரடியாக விளையாடி அதிவேகமாக ஸ்கோரை உயர்த்திய தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் அரைசதம் அடித்தார். 3ஆவது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய டி புருய்ன் 23 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய வில் ஜாக்ஸ் 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 46 பந்தில் 92 ரன்களை குவிக்க, அவரது அதிரடியால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்த கேப்பிட்டல்ஸ் அணி, 217 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு நிர்ணயித்தது.
பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் சரெல் எர்வி ஒரு ரன்னிலு, அடுத்து வந்த ஜோர்டன் காக்ஸ் ரன் ஏதுமின்றியும் வெய்ன் பார்னெல் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜேஜே ஸ்மட்ஸும் 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12, ஆக்கர்மேன் 8, ஜேம்ஸ் ஃபுலர் 11 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரமும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து 4 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார்.
அதன்பின் வந்த வீரர்களும் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரிட்டோரியா அணி தரப்பில் கேப்டன் பார்னெல், ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.