SA20 League: பார்ல் ராயலை வீழ்த்தில் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Fri, Jan 20 2023 11:08 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 6, ஜோஸ் பட்லர் 12 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த விஹான் லூப் - கார்பின் போஷ் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் 20 ரன்களில் போஷ் ஆட்டமிழக்க, 28 ரன்களைச் சேர்த்திருந்த லூப் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈயான் மோர்கன், கேப்டன் டேவிட் மில்லர், எவான் ஜோன்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இறுதியில் ஜோர்ன் ஃபார்டுயின் - கோடி யூசுஃப் ஆகியோர் 31 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்ல் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஐடன் மார்க்ரம், கார்ஸ், வெண்டெர் மொர்வ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கும் ஆடம் ரோஸிங்டன் - ஜோர்டன் ஹெர்மான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஸிங்டன் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சரெல் எர்வீ முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹெர்மான் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 23, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 ரன்களை சேர்த்து பங்களிக்க, இறுதியில் மார்கோ ஜான்சென் 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் ஆட்டநயாகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை