ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்; இணையத்தில் வைரலாகும் சச்சினின் பதிவு!

Updated: Thu, Jan 04 2024 13:03 IST
Image Source: Google

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி நேற்று கேப்டவுன் நகரில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் வெறும் 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி 9 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு கம்பெனி கொடுக்கும் விதமாக பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் தங்களது முதலில் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது ஒரு கட்டத்தில் 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்கிற வலுவான நிலையில் இருந்து அடுத்த 6 விக்கெட்டுகளை ரன்கள் எதுவும் எடுக்காமல் இழந்து தங்களது முதல் இன்னிங்சை 153 ரன்களுக்கே முடித்துக்கொண்டது.பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணியானது முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை குவித்துள்ளது. 

இன்னும் 36 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை விளையாட இருக்கும் தென்னாப்பிரிக்க அணி இன்று முற்றிலும் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்தது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். 

 

அவர் தனது பதிவில், “2024-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே 23 விக்கெட்டுகள் ஒரே நாளில் விழுந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட்டானபோது நான் விமானத்தில் ஏறினேன். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தால் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியே திரும்பவும் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த போட்டியில் நான் எங்கு எதை தவறவிட்டேன்? என்று எனக்கு புரியவில்லை” என்று சுவாரசியமான கருத்தை பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை