மீண்டும் பதக்கத்தை வென்ற ஸ்ரேயாஸ்; அறிவித்த ஜாம்பவான் - வைரல் காணொளி!

Updated: Fri, Nov 03 2023 12:55 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் அதை சேசிங் செய்த இலங்கை முதல் பந்திலிருந்தே இந்தியாவின் தெறிக்க விடும் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்து 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.

குறிப்பாக 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 14 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் படுதோல்வியை சந்தித்த இலங்கை உலகக் கோப்பையிலிருந்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி புதிய பாணியை கடைபிடித்து வருகிறது. அது ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்குவதாகும். முதல் விருதை விராட் கோலி பெற்றார். அதனை தொடர்ந்து ஷர்துல் தாகூர், கேஎல் ராகுல், ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர் என பலரும் பெற்றனர். ஒவ்வொரு முறையும் வித்தியசமான முறையில் விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்த பீல்டிங் பயிற்சியாளர் இந்த முறையும் வித்தியாசமான முறையில் விருது வழங்கியுள்ளார்.

 

இந்த முறை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறந்த பீல்டர் விருதை அறிவித்தார். இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த ஆட்டத்தை தொடருங்கள் என பாராட்டிய அவர், இறுதியில் சிறந்த பீல்டர் விருது இந்த முறை ஸ்ரேயாஸ் ஐயர் வழங்கப்படுகிறது என கூறினார். இதனை கேட்ட ஸ்ரேயாஸ் துள்ளி குதித்து மகிழ்ச்சியை கொண்டாடினார். 2ஆவது முறையாக அவர் இந்த விருதை தட்டிச் சென்றார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை