விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!
ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்றிரவு, நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளஸ்சிஸ், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹென்ரிச் கிளாசெனில் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில், 186 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து 187 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக வீராட் கோலி-டூ பிளெசிஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன் குவித்தனர். கோலி சதம் (63 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து அவுட்டானார். டூ பிளஸ்சிஸ் 71 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரில் 4 பந்து மீதமிருக்க 187 ரன் இலக்கை எட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை பெங்களூரு தக்க வைத்துள்ளது.
இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையையும் விராட் கோலி சமன்செய்து அசத்தினார். மேலும் அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக இருந்த விராட் கோலி இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தனது முதல் பந்தில் கவர் டிரைவ் ஆடியதை பார்த்தவுடனே எனக்கு தெரிந்து விட்டது இன்றைய நாள் விராட் கோலி உடையது என்று! விராட்டும் , டுபிளசிஸ்சும் இன்றைய ஆட்டத்தில் முழு கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். இன்றைய ஆட்டத்தின் ஸ்பெஷலாட்டியே அவர்கள் பெரிய ஷாட் மட்டும் ஆட வில்லை.
இருவரும் ரன்களை அபாரமாக ஓடி எடுத்து இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வெற்றிகரமான ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கிறார்கள். விராட் கோலியும் டூ பிளெசிஸையும் பார்க்கும்போது 186 ரன்கள் என்ற இலக்கு போதுமானதாக எப்போதுமே இருக்காது” என்று பாராட்டியுள்ளார்.