தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - சச்சின் டெண்டுல்கர் வருத்தம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவதற்காக தனது குரல் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த காணொளியில் டெண்டுல்கர் ஒரு ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவதைக் காணலாம். கேமில் கணிப்புகளைச் செய்து மகள் சாரா ஒரு நாளைக்கு ரூ.1.8 லட்சம் சம்பாதிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்த காணொளி வெளியான பிறகு சச்சின் டெண்டுல்கர் அந்த காணொளிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது போலியானவை என்று கூறி காணொளி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் கூறிகையில், “இந்த காணொளிகள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.
இது போன்ற காணொளிகள், விளம்பரங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் ஆழமான போலிகள் பரவுவதைத் தடுக்க அவர்களின் முடிவில் இருந்து விரைவான நடவடிக்கை முக்கியமானது” என்று கூறியுள்ளார்.
இந்த காணொளியில் சச்சின் தனது பதிவின் மூலமாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மகாராஷ்டிரா சைபர் கிரைம் ஆகியோரையும் டேக் செய்துள்ளார். மேலும், டிசம்பர் 2023 இல் ஒரு ஆய்வின்படி, டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் மோசடியால் பாதிக்கப்படும் ஆசியாவின் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.