ஷான் மார்ஷின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன், அற்புதமாக பேட்டிங் செய்து 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இந்த இன்னிங்ஸின் மூலம், சாய் சுதர்ஷன் தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்தார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் 33 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, அதிகபட்சமாக 30 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷான் மார்ஷ் 33 இன்னிங்ஸ்களில் விளையாடி 21 முறை 30+ ஸ்கோரை பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில், சாய் சுதர்ஷன் 33 இன்னிங்ஸ்களில் 24 முறை 30+ ஸ்கோரை பதிவுசெய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில் மூன்றாம் இடத்தையும், சச்சின் டெண்டுல்கர் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு சுதர்ஷன் இப்போது 8 போட்டிகளில் 52.12 சராசரியுடன் 417 ரன்கள் எடுத்து, நடப்பு ஐபிஎல் தொட்ரில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஜோஸ் பட்லரின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 90 ரன்களையு, சாய் சுதர்ஷன் 52 ரன்களையும், ஜோஸ் பட்லர் 42 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 50 ரன்களில் ஆட்டமிழந்தர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, மற்ற வீரர்கள் சோப்பிக்க தவறினர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.