முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும் - சாய் சுதர்ஷன்!

Updated: Mon, Dec 18 2023 18:08 IST
முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும் - சாய் சுதர்ஷன்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஜோஹன்னஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 400ஆவது வீரர் என்ற தனித்துவமான பெருமையை பெற்றார்.

அந்த வாய்ப்பில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 117 ரன்களை சேஸிங் செய்யும் போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அட்டகாசமாக தம்முடைய கேரியரை தொடங்கிய அவர் மொத்தம் 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற உதவினர். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்த 4ஆவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்ஷன் படைத்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு நிஜமான தருணம் மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் சாய் சுதர்ஷன், தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்துவதற்காக இதற்கு முன் அங்கு விளையாடிய முன்னாள் வீரர்களிடம் ஆலோசனை கேட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஆவர்,“நாட்டுக்காக முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும்.

ஒவ்வொரு குழந்தைகளும் நாட்டுக்காக விளையாடி அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கனவுடனேயே கிரிக்கெட்டில் விளையாட தொடங்குவார்கள். அந்த வகையில் எனக்கு முதல் போட்டி நன்றாக அமைந்தது என்று நினைக்கிறேன். பிட்ச் சற்று செட்டிலாகி இருந்தாலும் வித்தியாசமானதாக இருந்தது. இதில் ஆரம்பத்தில் வழக்கம் போல விளையாட கடினத்தை சந்தித்தேன்.ஆனால் எங்களுக்கிடையே நல்ல தொடர்பு இருந்தது. அது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் அட்ஜஸ்ட் செய்து விளையாட உதவியது. 

தென் ஆப்பிரிக்காவில் உள்ள மைதானங்களில் இந்தியாவை விட சற்று எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கிறது. எனவே இங்கு வருவதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய முன்னாள் வீரர்களிடம் இங்குள்ள சூழ்நிலைகளை பற்றிய விவரங்களை கேட்க முயற்சித்தேன். மேலும் இப்போட்டிக்கு முன்பாக இந்தியா ஏ அணிக்காக இங்கே நான் விளையாடினேன். எனவே இங்குள்ள கால சூழ்நிலைகளுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள எனக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது” என்று தெரிவித்துள்ளர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை