கவுண்டி கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன்!

Updated: Thu, Sep 28 2023 15:09 IST
கவுண்டி கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன்! (Image Source: Google)

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடிய ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களால் என்றும் மறக்காது. தனியாளாக ஆட்டத்தை மொத்தமாக குஜராத் அணியின் பக்கம் திருப்பினார் சாய் சுதர்சன். அங்கு தொடங்கிய சாய் சுதர்சனின் விஸ்வரூபம், டிஎன்பிஎல், இந்தியா ஏ அணிகளுக்காகவும் தொடர்ந்தது. இதனால் நீண்ட நாட்களுக்கு பின் இந்திய டெஸ்ட் அணிக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இடம்பெற போவதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்திய ஜெர்சியை அணிவதற்கு முன்பாகவே சாய் சுதர்சன் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணியின் ஜெர்சியை அணிந்திருக்கிறார். கடந்த மாதம் கவுண்டி கிரிக்கெட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் விளையாடுவதற்காக சர்ரே அணி தமிழக வீரர் சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்தது. இதற்கு பின் தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்தியாவில் கவுண்டி அணிகளுடன் நல்ல தொடர்பை அஸ்வின் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஹாம்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் சர்ரே அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டார். இதில் முதலில் பேட்டிங் செய்த ஹாம்ஷையர் அணி 219 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய சர்ரே அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது களமிறங்கிய சாய் சுதர்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 129 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் மூலம் சர்ரே அணி 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த இன்னிங்ஸில் சர்ரே அணிக்காக சாய் சுதர்சன் அதிக ரன்கள் எடுத்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை