ரமீஸ் ராஜாவை கண்டித்து சல்மான் பட் சரமாரி கேள்வி!
பாகிஸ்தான் நாட்டிற்கு பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து முன்னணி கிரிக்கெட் நாடுகள் யாரும் சென்று விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இப்படியான பொருளாதார இழப்பு அந்த நாட்டின் உள்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சியை பெரும் அளவில் பாதித்தது. அடிமட்ட அளவில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை வளர்க்க அவர்களுக்கு தேவையான நிதி இல்லை.
இந்தக் காரணத்தால் எப்படியாவது பெரிய அணிகளை தங்கள் நாட்டிற்கு வரவைத்து விளையாடுவதில் பாகிஸ்தான் மிகப்பெரிய முனைப்பு காட்டியது. இதனால் தங்கள் அணிகளுக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு பெரிய அணிகளின் வீரர்களை பயிற்சியாளர்களாக கொண்டு வந்தது. மேலும் பிஎஸ்எல் தொடருக்கு பாதுகாப்பு வசதிகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டது. சர்வதேச அளவிலும் அரசியல் சூழல்களில் மாறுதல் உண்டானது.
இதெல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் நாட்டிற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகள் தற்பொழுது வந்து விளையாடிவிட்டு பத்திரமாக நாடு திரும்பியிருக்கின்றன. இதெல்லாம் நடந்தது ரமீஷ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த பொழுதுதான். மேலும் உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்ததும் இவரது காலத்தில்தான். தற்பொழுது டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான அணி இறுதிப் போட்டிக்கு போனதும் இவரது காலத்தில்தான்.
ஆனால் இருந்தாலுமே இவரது செயல்பாடு குறித்து பழைய வீரர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. இவர் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெருமளவில் கவனம் செலுத்தவில்லை என்றும், இவர் சிறிய வீரர்களை டி20 கிரிக்கெட்டில் நுழைத்து அவர்களின் தரத்தை அழிக்கிறார் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்த நிலையில் புதிதாக வந்த அரசு சில காலம் இவருக்கு வாய்ப்பளித்து தற்போது இவரை பதவியில் இருந்து நீக்கி இருக்கிறது. இதற்கு அவர் அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார்.
தற்பொழுது இதைக் கண்டித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறும்பொழுது, “புதிய அரசு ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் பல வேலைகளை செய்ய அவரை அனுமதித்தது. இந்த வகையில் அவர் பெரிய அதிர்ஷ்டசாலி. அவர்கள் அவரை உடனடியாக பொறுப்பில் இருந்து அகற்றவில்லை. அவர்களும் அவரை ஆதரிக்கவே செய்தனர். ஒரே இரவில் அவரை நீக்கி விட்டது போல அவர் அவர்களுக்கு எதிராக நியாயமற்ற முறையில் தற்பொழுது கசப்பான கருத்துக்களை பேசி வருகிறார்.
இதற்கு முன்பும் இந்த பொறுப்பில் இருந்து பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் யாரும் இவரைப்போல் இப்படி கசப்பாக பேசி கொண்டு இருக்கவில்லை. இவர் செய்வதை பார்த்தால் ஒரு குழந்தையின் கையில் இருந்து யாரோ பொம்மையை பறித்துக் கொண்டதற்கு குழந்தை செய்வதைப்போல இருக்கிறது. அவர் கொஞ்சம் கருணை காட்டி மீண்டும் கிரிக்கெட் கமெண்ட்ரி செய்ய யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.