தோல்விக்கு ரோஹித்தின் முட்டாள்தனம் தான் காரணம் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து முடிந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை 2 - 1 என பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இந்தூர் களம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நம்பி பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த தவறான முடிவே காரணம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். அதில், “ஜடேஜாவை மிடில் ஆர்டரில் களமிறக்கியது ஆச்சரியமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் மட்டும்தான் ஷ்ரேயஸ் ஐயருக்கு முன், ஜடேஜா களமிறங்குவார் என்று பார்த்தால், 2ஆவது இன்னிங்ஸிலும் அவரை கொண்டு வந்தனர்.
அணியில் சிறந்த வீரர்கள் இருக்கும் போது, வலது - இடதுகை காம்பினேஷன்களை பார்க்கவே கூடாது. ஸ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடக்கூடியவர். அவரை சரியாக 5ஆவது இடத்தில் விளையாட வைத்திருந்தால் சிறப்பாக ரன் சேர்த்திருப்பார். ஆனால் ரோகித் எடுத்த முட்டாள்தனமான முடிவால் ஜடேஜா முன்கூட்டியே களமிறங்கி சொதப்பினார்.
பிட்ச்-ல் நன்கு ஸ்பின் இருந்த போது ஸ்ரேயாஸை களமிறக்கிவிடாமல் ரிவர்ஸ் ஸ்விங் ஆன போது அனுப்பி வைத்தனர். ஸ்ரேயாஸின் பலம், பலவீனத்தை நன்கு அறிந்த ஸ்டீவ் ஸ்மித், உடனடியாக மிட்செல் ஸ்டார்க்கை கொண்டு வந்து அவரின் விக்கெட்டை எடுத்தார். ஆனால் இது எப்படி இந்திய அணி கேப்டன் ரோகித்திற்கு தெரியாமல் போனது” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா டாப் ஆர்டரில் களமிறங்கி 70 ரன்கள் அடித்திருந்தார். அதே போன்று செய்வார் என்ற அதீத நம்பிக்கையின் காரணமாக ஜடேஜா மீது ரோஹித் சர்மா முடிவெடுத்துள்ளார். இவற்றினை எல்லாம் சரிசெய்துவிட்டு அடுத்த போட்டியில் வெற்றி கண்டே தீர வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் உள்ளார். ஏனென்றால் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.