செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்பதை கவுதம் கம்பீர் நிறுத்த வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது.
இதனால் அணியின் மூத்த வீரர்கள் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்தும், ரோஹித், விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும், ஆஸ்திரேலிய தொடர் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்திருந்தார்.
ஆனால் அச்சயமயத்தில் விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கம்பீர், “ரிக்கி பாண்டிங்குக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலியாவைப் பற்றி பேச வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை” என காட்டமான பதிலை வழங்கினார். கம்பீரின் இந்த பதிலானது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இனி நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை பிசிசிஐ அனுப்ப வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளது தற்சமயம் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் பதிவில், “அஸ்திரேலிய தொடருக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியதைப் கேட்டேன்.
என்னை பொறுத்தவரையில் இதுபோன்று செய்தியாளர்களிடம் பேசும் பொறுப்புகளிலிருந்து கம்பீரை பிசிசிஐ விலக்கி வைத்திருப்பது நல்ல முடிவாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் அணிக்கு பயிற்சி அளிக்கும் வேலையை மட்டும் மேற்கொள்ளட்டும். ஏனெனில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, அவரிடம் சரியான நடத்தையோ வார்த்தைகளோ இல்லை. அவரது ஆக்ரோஷமான குணம் வெளிப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் போன்றோர் அவரைக் காட்டிலும் பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு சிறந்தவர்களாக இருப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கௌதம் கம்பீரை நேரடியாக தாக்கியதாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.