ரோஹித் செய்த அந்த ஒரு செயல் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் - சஞ்சு சாம்சன்!

Updated: Tue, Oct 22 2024 12:45 IST
Image Source: Google

இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் இதில் ரிஷப் பந்திற்கு மட்டுமே தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன. மாறாக சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பானது கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக ரிஷப் பந்த் அடுத்தடுத்த போட்டிகளில் சரிவர ரன்களைச் சேர்க்க தவறிய நிலையிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன் நான் பிளேயிங் லெவனில் இருக்க போகிறேன் என்று அணி நிர்வாகம் என்னிடம் தெரிவித்திருந்தது. இதனால் நான் அந்த போட்டிகாக தீவிரமாக என்னை தயார்செய்து கொண்டேன். மேலும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும் நான் இருந்தேன். 

ஆனால் டாஸ் நிகழ்வுக்கு முன்னதாக இந்திய அணி மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அதே பிளேயிங் லெவனுடன் விளையாட முடிவுசெய்ததாக கேப்டன் ரோஹித் சர்மா என்னிடம் வந்து கூறினார். அதனால் என்னால் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாமல் போனது. பின்னர் இப்போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தயாராகி கொண்டிருந்த போது கேப்டன் ரோஹித் சர்மா என்னிடம் வந்து, தான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை விளக்கத் தொடங்கினார்.

அப்போது அவர், ஒரு நிமிடத்திற்கு பிறகு வந்து நீ என்னை திட்டிக் கொண்டு தானே இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இல்லை. உன் மனதில் ஏதோ இருப்பதை நான் உணர்கிறேன் என்று ரோகித் சர்மா கூறினார். ஒரு வீரராக, நிச்சயமாக நான் விளையாட விரும்புகிறேன், ஆனால் அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டேன்.  மேலும் ரோஹித் சர்மா தாம் விளையாடும் வீரர்களின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, டாஸ் செய்வதற்கு முன், என்னுடன் 10 நிமிடங்கள் செலவிட்டார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் ஒரு கேப்டன் அணியில் விளையாடும் வீரர்களைப் பற்றி யோசிக்காமல் அணியின் தேர்வு செய்யப்படாத என்னை பற்றி யோசித்து எனக்காக பேசி ஆறுதல் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்பாடுத்தியது. ரோகித் சர்மாவிடம் இருக்கும் மிகச்சிறந்த குணமாக நான் இதனை பார்க்கிறேன். மேலும் அவரது இந்த செயலானது என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

சர்வதேச கிரிக்கெட்டில் போதிய வாய்ப்பு கிடைக்காமல் ஒவ்வொரு முறையும் போராடி வரும் சஞ்சு சாம்சன், சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியை கொடுத்துள்ள சஞ்சு சாம்சன், தனக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை