ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்த சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், சந்தீப் சர்மா உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
மேற்கொண்டு ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, நிதீஷ் ரானா போன்ற வீரர்களையும் அணி ஏலத்தில் எடுத்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்த அணிக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தில் இருந்து மீண்டும் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து டி20 தொடரின் போது விரலில் காயத்தை சந்தித்திருந்த சஞ்சு சாம்சன் அதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் ரஞ்சி கோப்பை போட்டியிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் துறைகளில் தனது உடற்தகுதியை எட்டினார். இதனையடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை பிசிசிஐ வழங்கியது.
இதனையடுத்து அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இருப்பினும் அவர் முதல் சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஒருவேளை சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படவில்லை எனில், அணியின் மாற்று விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.