சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்து அப்டேட் வழங்கிய ராகுல் டிராவிட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தாஸ் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டன் சஞ்சு சாம்சன் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியின் சஞ்சு சாம்சன் காயமடைந்ததுடன், ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அவரது வலி தீவிரமடைந்தததை தொடர்ந்து மேற்கொண்டு அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து சஞ்சு சாம்சனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் அவரது ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் இருந்தும் சஞ்சு சாம்சன் விலகுவார் என்றும் கூறப்பட்டது. ஏற்கெனவே ராஜஸ்தான் அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், சஞ்சு சாம்சனும் காயத்தால் போட்டிகளை தவறவிடுத்து பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சுவுக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்ததுன்னு நினைக்கிறேன், கடைசி போட்டியிலோ அல்லது இந்தப் போட்டியிலோ அவரால் விளையாட முடியவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், எங்கள் மருத்துவக் குழு அவரை விளையாட அனுமதிக்கவில்லை.
எனவே மேலும் அவர் பயணம் செய்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ குழு ஆலோசனை வழங்கியது. அதேசமயம் இன்னும் இரண்டு விமானங்கள் பயணம் செய்ய வேண்டும் என்பதால் கூட அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அவருக்கு சிகிச்சை அளித்து, விரைவில் அவரைத் திரும்பக் கொண்டுவர முயற்சிப்பதற்காக, பிசியோவை அவருடன் வைத்திருந்தோம். அவர் குணமடைவதை நாங்கள் தினமும் கண்காணித்து வருகிறோம்.
Also Read: LIVE Cricket Score
அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு என்னிடம் இல்லை, ஆனால் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். போட்டிகள் விரைவாக வரவிருக்கின்றன, பின்னர் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒரு இடைவெளி உள்ளது. எனவே, நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். இப்போதைக்கு, அவர் இந்த போட்டியில் விளையாட மாட்டார். அதனால்தான் அவர் பெங்களூருக்கு பயணம் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.