பந்து வீச்சில் தொடக்கத்தையும் இறுதியையும் சிறப்பாக செய்தோம் - சஞ்சு சாம்சன்!

Updated: Sun, Apr 28 2024 14:16 IST
பந்து வீச்சில் தொடக்கத்தையும் இறுதியையும் சிறப்பாக செய்தோம் - சஞ்சு சாம்சன்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 76 ரன்களையும், தீபக் ஹூடா 50 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் 34, யஷஸ்வி 24, ரியான் பராக் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தாலும் அதன்பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் இணை அபாரமாக விளையாடியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 71 ரன்களையும், துருவ் ஜூரெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “விக்கெட்டிற்கு பின்னால் இருப்பது எப்போதும் அதிர்ஷ்டமான ஒன்று. புதிய பந்தில் எங்களுக்கு நல்ல பர்ச்சேஸ் இருந்தது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அணியாக சேர்ந்து பவர்பிளேவில் முக்கிய ஓவர்களை வீசினார்கள். களத்திற்கு வெளியே நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்துள்ளதால் எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு ஒவ்வொரு பந்திலும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அதனால் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக செயல்பட்டு அவர்கள் போட்டியை எங்கள் பக்கம் எடுத்து வந்தனர்.

நாங்கள் பந்து வீச்சில் தொடக்கத்தையும் இறுதியையும் சிறப்பாக செய்தோம். துருவ் ஜூரெல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடுவதை பார்த்துள்ளோம்ம். நாங்கள் அவரை நம்புகிறோம். நன்றாக செயல்படும் எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது.நாங்கள் இதே செயல்முறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நாங்கள் அணி மீட்டிங்கில் இதுகுறித்து விவாதித்து வருகிறோம். எனவே எங்களுடைய திட்டங்களுக்கு ஏற்றவாறு தொடர்ந்து நாங்கள்  விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை