ஐபிஎல் 2022: நடுவர்களின் முடிவுக்கு ரிவியூ செய்ய அனுமதிக்க வேண்டும்; முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்!

Updated: Tue, May 03 2022 22:12 IST
Image Source: Google

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் கள நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டியின் முடிவே மாறிப்போகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி கேபிடள்ஸுக்கு 36 ரன்கள் தேவைப்பட, முதல் 3 பந்துகளையும் சிக்ஸர் அடித்து வெற்றிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருந்தார் ரோவ்மன் பவல். அப்படியான சூழலில் அந்த ஓவரின் 3ஆவது பந்துக்கு நோ பால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் இடுப்புக்கு மேலே சென்ற அந்த பந்துக்கு நடுவர் நோ பால் கொடுக்கவில்லை. அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால், ஒரு பந்து கூடுதலாக கிடைப்பதுடன், ஒரு ஃப்ரீஹிட் டெலிவரியும் கிடைத்திருக்கும். அதன்மூலம் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும். ஆனால் நடுவர் நோ பால் கொடுக்காததால் டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

அந்த சம்பவத்தின்போது அம்பயரின் முடிவுக்கு எதிராக, களத்தில் நின்ற தனது அணி வீரர்களை களத்திலிருந்து வெளியே வருமாறு டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் செய்கை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதே கவாஸ்கர் உட்பட பல முன்னாள் ஜாம்பவான்கள் ஐபிஎல் நடுவரின் தரத்தை விமர்சித்ததுடன் கேள்விக்குள்ளாக்கினர்.

இந்நிலையில், அதேமாதிரி மற்றுமொரு மோசமான சம்பவம் நடந்தது. கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவர் வைடு இல்லாத பந்துகளுக்கு வைடு கொடுத்ததால் போட்டியின் முடிவே மாறியது.

கேகேஆருக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 152 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 153 ரன்களை கேகேஆருக்கு இலக்காக நிர்ணயித்தது. 153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணிக்கு கடைசி 2 ஓவரில் 18 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் களத்தில் இருந்தனர்.

19ஆவது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, 3ஆவது பந்தை வைடாக வீசினார். அதற்கு வீசப்பட்ட ரீபாலில் ரிங்கு சிங் பவுண்டரி அடிக்க சஞ்சு சாம்சன் அதிருப்தியடைந்தார். அதன்பின்னர் பிரசித் கிருஷ்ணா வீசிய 4ஆவது பந்துக்கு நடுவர் வைடு கொடுத்தார். பிரசித் கிருஷ்ணா ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே யார்க்கராக வீசிய அந்த பந்து உண்மையாகவே வைடு இல்லை. ஆனால் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் நகன்று சென்றும் அடிக்க முடியாததால் அதை வைடு என நினைத்து தவறுதலாக வைடு கொடுத்தார் நடுவர். 

அதனால் செம கடுப்பான ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ரிவியூ செய்தார். உண்மையாகவே சாம்சன் விக்கெட்டுக்காக ரிவியூ எடுக்கவில்லை. வைடா இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்காக, தனது கோபத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் விதமாக ரிவியூ எடுத்தார்.

அதன்பின்னர் மீண்டும் 5ஆவது பந்தையும் வைடு இல்லாததற்கு நடுவர் வைடு கொடுக்க, இம்முறை அம்பயரிடம் நேரடியாகவே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சாம்சன். ஆனாலும் எந்த பயனும் இல்லை. நடுவரின் தவறான முடிவுகளால் அந்த போட்டி அந்த ஓவரிலேயே முடிந்தது. அந்த ஓவரில் கேகேஆர் அணி 17 ரன்கள் அடிக்க ஆட்டம் டை ஆனது. கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து கேகேஆர் அணி வெற்றி பெற்றது.

நடுவர்களின் இதுமாதிரியான தவறான முடிவுகள் போட்டியின் முடிவையே மாற்றிவிடுகின்றன என்பதால், வைடு மற்றும் நோ பால்கள் விஷயத்தில்  வீரர்கள் ரிவியூ எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய டேனியல் வெட்டோரி, “கண்டிப்பாக வீரர்கள் வைடுகளை ரிவியூ செய்ய வழிசெய்ய வேண்டும். முக்கியமான நேரங்களில் வீரர்கள் அதை முடிவு செய்ய வேண்டும். டி.ஆர்.எஸ் எடுக்க அனுமதித்ததால்தான் தவறுகளை திருத்த முடியும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய இம்ரான் தாஹிர், “ஆம்.. ஏன் ரிவியூவுக்கு அனுமதிக்கக்கூடாது? கண்டிப்பாக அனுமதிக்கலாம். பவுலர்களுக்கு ஆதரவாக பெரிதாக எதுவுமே இல்லை. ஒரு பவுலரின் பந்தை பேட்ஸ்மேன் அடித்து ஆடிக்கொண்டிருக்கும்போது, அந்த பவுலருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வைடு யார்க்கர் அல்லது வைடு லெக் பிரேக் தான். அதற்கும் வைடு கொடுத்தால் பவுலருக்கு பெரிய பிரச்னை தான்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை