ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அவதிப்படும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
மேற்கொண்டு இத்தொடரின் முடிவில் இந்திய அணியின் வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக காயமடைந்து வருகின்றனர். முன்னதாக இத்தொடரின் கடைசி போட்டியின் போது ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் காயமடைந்தனர், இப்போது இந்த பட்டியலில் மற்றொரு இளம் வீரரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்ஃப்ராஸ் கானும் இத்தொடரின் போது காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சர்ஃப்ராஸ் கான் தனது விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் பாகுதியில் விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இதனை மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் சர்ஃப்ராஸ் கானே தெரிவித்ததாகவும் எம்சிஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து எம்சிஏ வட்டாரங்கள் கூறுகையில், 'சர்ஃப்ராஸ் கானின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அடுத்த ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட மாட்டார் என்று எங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், தேசிய கிரிக்கெட் அகாடமி அவரது உடற்தகுதி குறித்த மதிப்பீட்டை நடத்தி எங்களுக்குத் தெரிவிக்கும்” என்று கூறியுள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த சர்ஃப்ராஸ் கான், இதுவரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் என 371 ரன்களை எடுத்துள்ளார். இதுதவிர்த்து முதல் தர கிரிக்கெட்டில், 54 போட்டிகளில் விளையாடி 65.61 என்ற சராசரியுடன் 16 சதங்கள், 14 அரைசதங்கள் என 4,593 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.