மேத்யூஸ் அவுட் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து!

Updated: Fri, Nov 10 2023 15:24 IST
மேத்யூஸ் அவுட் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து! (Image Source: Google)

இதுவரையில் இந்த உலகக் கோப்பையின் ஞாபகங்களாக எதிர்காலத்தில் நிலைக்க போகிற விஷயங்கள் மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த இரட்டை சதம், மற்றும் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்தது இரண்டும் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியாக வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்தது.

இரண்டு அணிகளுமே இந்த உலகக் கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடியிருக்கின்ற காரணத்தினால், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இதையாவது செய்ய வேண்டிய நெருக்கடியில் இருந்தார்கள். இப்படியான போட்டியில் உள்ளே வந்து விளையாடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக முறையிடப்பட்டு மேத்யூஸ் விக்கெட்டை ஷாகிப் அல் ஹசன் வாங்கினார். இது இரண்டு அணிகளுக்கும் இடையே ஆன பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ஒரு பக்கம் விதிகளை பற்றி பேசுகிறது. இன்னொரு பக்கம் ஸ்பிரிட் ஆஃப் கேம் பற்றி பேசுகிறது. மேத்யூஸ் உள்ளே வந்த பொழுது அவரது ஹெல்மெட் சரியில்லை என்று புது ஹெல்மெட் கேட்டார். நான் இன்னொரு வீடியோவில் பார்த்த பொழுது ஷாகிப் அல் ஹசன் இலங்கைக்கு எதிராக விளையாட வந்து கார்ட் எடுப்பதற்கு தாமதமானது. ஆனால் அவரைத் தொடர்ந்து விளையாட விட்டார்கள். 

இது கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கும் இடையேயான போர் மாதிரி மாறிவிட்டது. உண்மையில் ஷாகிப் அதற்கு மேல்முறையீடு செய்தார். நடுவர்கள் அவுட் கொடுத்தார்கள். மேத்யூஸ்க்கு ஏற்கனவே கள நடுவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் அவுட் செய்யப்பட்டதில் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். அந்த விதத்தில் யார் அவுட் ஆகியிருந்தாலும் அதை மோசமாகத்தான் உணர்வார்கள்.

இந்தப் பிரச்சனையில் ஷாகிப் மற்றும் மேத்யூஸ் இருவருமே சரியாகத்தான் சொன்னார்கள். ஒருவருக்கும் விதி தெரியும். இன்னொருவருக்கு ஹெல்மெட் சரியில்லை. அவர் அதே ஹெல்மெட்டில் எப்படி விளையாட முடியும் என்று கேட்டார். இதில் பாதிக்கப்பட்ட தரப்பு நிச்சயமாக ஆட்டம் இழந்து வெளியே சென்ற மேத்யூஸ் தரப்புதான்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை