SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 281 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது ப்ளூம்ஃபோன்டைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியானது மையா பௌச்சர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 128 ரன்களையும், மையா பௌச்சர் 126 ரன்களையும் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை லாரா வோல்வார்ட் 8 ரன்களுடனும், அன்னேக் போஷ் 6 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அன்னேக் போஷ் 6 ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் வோல்வார்ட்டுடன் இணைந்த அன்னேரி டெர்க்சனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் லாரா வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 65 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சுனே லூஸ் - மரிஸான் கேப் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மரிஸான் கேப்பும், 56 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் சுனே லூஸும் தனது விக்கெட்டை இழனது பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் சோலே ட்ரையான் 20 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல் 4 விக்கெட்டுகளையும், லாரன் ஃபிலர், ரியானா மெக்டொனால்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை மையா பௌச்சர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் ஜோடி சேர்ந்த டாமி பியூமண்ட் - கேப்டன் ஹீதர் நைட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டாமி பியூமண்ட் 8 ரன்களுடனும், ஹீதர் நைட் 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அயன்டா ஹ்லுபி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 145 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.