SAW vs SLW, 1st ODI: மழையால் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி!
இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஈஸ்ட் லண்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அன்னேக் போஷும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் அபாரமாக விளையாடிய தஸ்மின் பிரிட்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய அன்னெக் போஷ் 39 ரன்களுக்கும், அடுத்து வந்த சுனே லூஸ் 22 ரன்களுக்கும், மரிஸான் கேப் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சதமடித்து அசத்திய தஸ்மின் பிரிட்ஸும் 116 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நதின் டி கிளார்க் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான் ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை குவித்தது. இலங்கை அணி தரப்பில் ரனசிங்கே, குமாரி மற்றும் கவிஷா தில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்று 23 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் அட்டம் தடைபட்டது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் தென் ஆப்பிரிக்கா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போண்டி முடிவின்றி அமைந்ததாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.