இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன்பின் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - லாரா குட்ஆல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பின் லாரா குட்ஆல் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டெல்மி டக்கர், சுனே லூஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த மரிஸான் கேப் 36 ரன்களுக்கும், நதின் டி கிளார்க் 35 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர். ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை தனது அதிரடியைக் கைவிடாத கேப்டன் லாரா வோல்வார்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினார். 

இதனால் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் லாரா வோல்வார்ட் 23 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் விளாசியதுடன் 184 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 301 ரன்களைக் குவித்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தப்பத்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தார். 

அதேசமயம் மறுபக்கம் விஷ்மி குணரத்னே 26 ரன்களுக்கும், பிரசாதனி 4 ரன்களுக்கும், ஹன்சிமா கருணரத்னே 3 ரன்களுக்கும், கவிஷா தில்ஹாரி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய நிலாக்‌ஷி டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சமாரி அத்தப்பத்து சதமடித்து அசத்தியதுடன், 150 ரன்களையும் கடந்தார். மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய நிலாக்‌ஷி டி சில்வாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சமாரி அத்தபத்து 26 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 195 ரன்களையும், நிலாக்‌ஷி டி சில்வா 50 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மகளீர் அணி 44.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்த சமாரி அத்தப்பத்து ஆட்டநாயகியாகவும், இரு போட்டிகளிலும் சதமடித்த தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் தொடர் நாயகி விருதையும் வென்றனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News