SCO vs AUS, 2nd T20I: இங்கிலிஸ், ஸ்டொய்னிஸ் அபாரம்; ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட் இன்றைய போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து இன்றைய ஆட்டத்திலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 23 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த ஜோஷ் இங்கிலிஸ் - கேமரூன் கிரீன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் க்ரீனும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்த, மறுபக்கம் ஜோஷ் இங்கிலிஷ் அதிரடியில் மிரட்டினார்.
இப்போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஷ் இங்கிலிஸ் அடுத்தடுத்த சிக்ஸர்கள் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 103 ரன்களை எடுத்திருந்த ஜோஷ் இங்கிலிஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 20 ரன்களையும், டிம் டேவிட் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க் வீரர் மைக்கேல் ஜோன்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ஜார்ஜ் முன்சி - பிராண்டன் மெக்முல்லன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜார்ஜ் முன்ஸி 19 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த பிராண்டன் மெக்முல்லன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் மெக்முல்லன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன், சார்லி டியர், மைக்கெல் லீஸ்க், மார்க் வாட், கிறிஸ் கிரீவ்ஸ் உள்ளிட்ட அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழ்னது பெவிலியன் திரும்பினர். இதனால் ஸ்காட்லாந்து அணியானது 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket