டி20 பிளாஸ்ட்: சைஃபெர்ட் சதம் வீண்; ஹாம்ஷையர் அபார வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹாம்ஷையர் - சசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சசெக்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து, ஹாம்ஷையர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஹாம்ஷையர் அணிக்கு பென் மெக்டர்மோட் - ஜேம்ஸ் வின்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 65 ரன்களில் ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 60 ரன்கள் சேர்த்திருந்த பென் மெக்டர்மோட்டும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய பிரெஸ்ட், வைட்லி, ஜேம்ஸ் ஃபுல்லர், ஆல்பெர்ட் என வந்தவேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹாம்ஷையர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. சசெக்ஸ் அணி ஹென்றி குரோம்ப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய சசெக்ஸ் அணியில் லுக் ரைட், ஆலிஸ்டர் ஓர், ஃபின் உட்சன், கேப்டன் ரவி போபாரா என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய டிம் சைஃபெர்ட் சதம் விளாசி அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சைஃபெர்ட் 100 ரன்களை எடுத்திருந்த நிலையிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சசெக்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் ஹாம்ஷையர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் சசெக்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது.