எங்களை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது - ரோஹித் சர்மா!

Updated: Wed, Aug 07 2024 21:41 IST
Image Source: Google

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும், பதும் நிஷங்கா 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. 

இதில் அதிகாட்சமாக ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில்க் துனில் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும்வென்றது. 

மேலும் இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், இத்தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய இலங்கை வீரர் துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினர். மேற்கொண்டு கடந்த 1997ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கை அணியானது இந்தியாவை வீழ்த்தி இருதரப்பு தொடரை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தனித்தனியே தங்களது திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இந்தியாவுக்காக விளையாடும்போது ஒருபோதும் மனநிறைவு இருக்கப்போவதில்லை. அதிலும் நான் கேப்டனாக இருக்கும்போது அதற்கு வாய்ப்பே இல்லை.

அதேசமயம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுபவர்களை பராட்ட வேண்டியது அவசியமாகும். அதன்படி இலங்கை அணியானது இத்தொடரில் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேற்கொண்டு நாங்கள் மைதானத்தின் தன்மைக்கேற்ப எங்களது வீரர்களைத் தேர்வு செய்தோம், அதற்கேற்றது போல் சில வீரர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனவே நாங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்தத் தொடரில் எங்களுடைய செயல்பாட்டை காட்டிலும் நாம் பார்க்க வேண்டிய பகுதிகள் நிறைய உள்ளன, ஏனென்றால் அடுத்த முறை இதுபோன்ற மைதானங்களில் நாம் விளையாடும் போது சிறப்பாகத் தயாராக வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது ஒரு அங்கம் மட்டுமே, இந்த தோல்வியால் உலகம் ஒன்றும் முடிந்துவிடப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் சில தொடர்களை இழந்தாலும், அதிலிருந்து எப்படி திரும்பி வருகிறீர்கள் என்பது தான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை