INDW vs SAW, Test: ஷஃபாலி இரட்டை சதம்; ஸ்மிருதி சதம் - வரலாறு படைத்த இந்திய அணி!

Updated: Fri, Jun 28 2024 19:41 IST
INDW vs SAW, Test: ஷஃபாலி இரட்டை சதம்; ஸ்மிருதி சதம் - வரலாறு படைத்த இந்திய அணி! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இதில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா சர்வதேச மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவருக்கு துணையாக விளையாடிய ஷாஃபாலி வர்மாவும் சர்வதேச மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 292 ரன்களை கடந்த சமயத்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 149 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷுபா சதீஷும் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஃபாலி வர்மா தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 23 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 205 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதனையடுத்து இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்த கையோடு 55 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 525 ரன்களைக் குவித்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் வலிமையான முன்னிலையுடன் இந்திய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் இந்திய அணி இப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 525 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் (ஆடவர், மகளிர்) வரலாற்றில் முதல் நாளிலேயே அதிக ரன்களை குவித்த அணி எனும் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை ஆடவர் அணி கடந்த 2002ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் 509 ரன்களைச் சேர்த்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை