சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஷஃபாலி வர்மா!

Updated: Thu, May 09 2024 20:36 IST
Image Source: Google

வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய மகளிர் அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியதுடன் வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைட் வாஷ் செய்தும் மிரட்டியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டியானது சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தயாளன் ஹேமலதா 37 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 33 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் அணியின் வெற்றிக்காக போராடிய ரிது மோனி 37 ரன்களையும், சொரிஃபா கதும் 28 ரன்களையும் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்ன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய ஷஃபாலி வர்மா 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இது அவர் பங்கேற்கும் 100ஆவது சர்வதேச போட்டியாகவும் அமைந்தது. இதன்மூலம் மிக இளம் வயதில் 100ஆவது சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை எனும் வெஸ்ட் இண்டீஸின் ஷெமைன் காம்பெல்லின் சாதனையை ஷஃபாலி வர்மா முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

 

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷெமைன் காம்பெல் 21 வயது 18 நாள்களில் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது ஷஃபாலி வர்மா 20 வயது 102 நாள்களில் 100ஆவது சர்வதேச போட்டியில் பங்கேற்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலின் மூன்றாம் இடத்தில் டெண்ட்ரா டோட்டின் 21 வயது 200 நாள்களில் 100ஆவது சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை