வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக அறிமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கியது பிசிசிஐ!
இந்திய அணி ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு ஷிகர் தவன் தான் கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்த நிலையில் தற்போது கேஎல் ராகுல் பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சியடைந்துவிட்டார் எனக் கூறி ராகுலை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தவன் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார்.
நீண்ட நாட்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் ஆகியோர் இத்தொடர் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளனர். இதனால், இவர்தான் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிக கவனம் பெற்றது வாஷிங்டன் சுந்தர்தான்.
வாஷிங்டன் சுந்தர் சமீபத்தில் இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடினார். அத்தொடரில் சுந்தர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களை குவித்து நிலையில் பேட்டிங்கிலும் அவ்வபோது ஓரளவுக்கு பெரிய ஸ்கோர்களை அடித்து அசத்தினார். இதனால்தான், இவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் கவுண்டி கிரிக்கெட்டில் லங்கஷையர் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு இடது கையில் அடிப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. காயம் சரியாக இரண்டு வாரங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், வாஷிங்டன் சுந்தர் ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் சபாஷ் அஹ்மத் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. மேலும், சுந்தர் இப்படி தொடர்ந்து காயம் காரணமாக விலகி வருவதால், இனி வாய்ப்பே கொடுக்க கூடாது என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாகவும் கூறப்படுகிறது.