வெறும் வேகம் மட்டும் போதாது - உம்ரான் மாலிக் குறித்து அஃப்ரிடி!
ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை சன்ரைசர்ஸ் அணியில் விளையாடும் காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் பெற்றார்.
ஒரு காலத்தில் இந்திய வீரர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்துவீசினால், அது தலைப்பு செய்தியில் இடம்பெறும். ஏனென்றால் இந்தியாவில் எப்போயாவது அப்படி ஒரு சம்பவம் நிகழும்.
வருண் ஆரோன் முதல் முறையாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் போது, அதனை இந்திய ரசிகர்கள் பெரிய சாதனையாக தான் கருதினர். ஆனால், பாகிஸ்தானில் அதே காலத்தில் எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் அசால்லடாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசுவார்கள். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சுக்காக தனி கட்டமைப்பை வைத்திருந்தது.
அந்த நாட்டில் நீங்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் எல்லாம் பந்துவீசினால், உங்களை வேகப்பந்துவீச்சாளர் என்று மதிக்கவே மாட்டார்கள். இதனை ஒரு பேட்டியில் வாசிம் அக்ரம் கூட சொல்லி இருந்தார்.
ஆனால், காலம் மாற, மாற இந்தியாவும் வேகப்பந்துவீச்சுக்கு என ஒரு கட்டமைப்பை உருவாக்கியது. ஒவ்வொரு மாநில கிரிக்கெட் அணியிலும் வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய தனி நபர் நியமிக்கப்பட்டு, அவர்களது திறமையை கண்டறிய பிசிசிஐ முடிவு எடுத்தது. அப்போது காஷ்மீர் கிரிக்கெட் அணிக்காக, வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய இர்ஃபான் பதான் சென்ற போது தான் உம்ரான் மாலிக் கண்டறியப்பட்டார்.
இதே போன்று ஐபிஎல் தொடரிலும் வேகப்பந்துவீச்சாளர்களை ஒவ்வொரு அணியும் கண்டறிந்து தனி பயிற்சி அளித்தது. அப்படி வந்தவர் தான் பும்ரா. சுழற்பந்துவீச்சையே நம்பி இருந்த இந்தியா, விராட் கோலி கேப்டன்ஷியில் தான் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து போட்டிகளை வெல்லும் அணியாக மாறியது. ஒரு காலத்தில் பாகிஸ்தானில் மட்டும் தான்வேகப்பந்துவீச்சாளர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசுவார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது.
அதுவும் உம்ரான் மாலிக் வருகைக்கு பிறகு, உலகின் அதிவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். இது பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுப்பை தரும் அல்லவா. இந்த நிலையில் தான் உம்ரான் மாலிக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஷாஹின் ஷா ஆஃப்ரிடியும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஷாஹின் ஆப்ரிடி, “வேறும் வேகம் மட்டும் இருந்தால் உங்களுக்கு உதவாது. லைன், லேங்த், ஸ்விங் ஆகியவையும் தேவை” என்று ஒரே வாக்கியத்தில் பதில் அளித்தார். இதை தவிர உம்ரான் மாலிக் குறித்து பேச்சுக்கு கூட அவர் பாராட்டவில்லை.