விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய ஷாகித் அஃப்ரிடி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற கோலி எந்த போட்டியிலும் 20 ரன்களை தாண்டவில்லை.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் தடுமாற்றம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அஃப்ரிடி, “ஜிம்பாப்வேயில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மீண்டும் அணிக்கு வரக்கூடும். மிக நீண்ட நாட்களாக அவர் தனக்கென நிர்ணயித்த தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை.
அதே சமயம் எனது ஆலோசனைகளை பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் அது சமநிலையான அணி என்றும், ஆசியக் கோப்பையில் மட்டுமல்ல, உலகக் கோப்பையிலும் எங்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் அணியில் உள்ள முதல் 12 வீரர்கள் மிகவும் வலிமையானவர்கள். அவர்கள் நல்ல முடிவுகளைக் கொண்டு வருவார்கள்” என்று தெரிவித்தார்.