டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷாகிப் அல் ஹசன்!
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சமீபத்தில் நடந்துமுடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல் ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடருடன் ஷாகிப் அல் ஹசன் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய ஷாகிப் அல் ஹசன், "புதிய வீரர்களை அணியில் கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டிற்கும் இது பொருந்தும். மேலும் நான் எனது ஓய்வு முடிவு குறித்து தலைமை தேர்வுக் குழு தலைவர் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோரிடம் கலந்தாலோசித்து உள்ளேன். அனைவருமே, இது தான் நான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் என்றும், புதிய வீரர்கள் வருவதற்கும் சரியான தருணமாக இருக்கும் என்றும் கூறினர்.
அதனால் மிர்பூரில் எனது கடைசி டெஸ்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளேன், அது நடக்கவில்லை என்றால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தான் எனது கடைசி டெஸ்ட்டாக இருக்கும். வங்கதேசத்திற்கு செல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் நான் அங்கு சென்றவுடன் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவது ஆபத்தானது. எனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் எனது டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தற்சமயம் 37 வயதாகும் ஷாகிப் அல் ஹசன், வங்கதேச அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் இதுநாள் வரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதம், 31 அரைசதங்களுடன் 4,543 ரன்களையும், 242 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 129 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,551 ரன்களையும், 149 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 247 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகிப் அல் ஹசன் 9 சதங்கள் மற்றும் 56 அரைசதங்கள் என 7,570 ரன்களை குவித்துள்ள நிலையில், பந்துவீச்சில் 317 விக்கெட்டுகளை குவித்துள்ளார். வங்கதேச அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஷாகிப் அல் ஹசன் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.