எல்லை மீறிய ஷகிப்; கடுப்பான ரசிகர்கள்!
வங்கதேசத்தின் உள்ளூர் டி20 தொடரான தாக்கா பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோஹம்மெதான் ஸ்போர்டிங் கிளப் - அபஹானி லிமிடேட் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மோஹம்மெதான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு ஒரு எல்.பி.டபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால், நிதானத்தை இழந்த ஷாகிப் அல் ஹசன் அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதோடு நிற்காமல், கள நடுவருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.
அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து கள நடுவரை நோக்கி வேகமாக வந்த ஷகிப், ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வீசினார்.
இப்படியொரு மோசமான செயல்பாட்டை உலகத் தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் வெளிப்படுத்தி இருப்பது வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களையே எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. சமீபத்தில் தான், இலங்கைக்கு எதிரான தொடரில், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம், இலங்கை வீரரை தள்ளிவிடச் சொல்லி, சக வங்கதேச வீரரிடம் தெரிவித்தது சர்ச்சையான நிலையில், ஷகிப்பின் இந்த செயல்பாடு எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாததாக அமைந்துள்ளது.