பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இடம்பிடிக்காத முகமது ஷமி; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

Updated: Sat, Oct 26 2024 10:29 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ் காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேசமயம் காயம் காரணமாக கடந்தாண்டு முதல் இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கும் முகமது ஷமி, பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். முன்னதாக, கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் மற்றும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார்.

பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது காயத்தில் இருந்து மீளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முகமது ஷமி, வங்கதேச டெஸ்ட் தொடரிலேயே கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்து. ஆனால் சில காரணங்களால் அவரால் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களிலும் அணிக்கு திரும்ப முடியாமல் போனது.  இடம்பிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தான் தற்சமயம் என்சிஏவில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த முகமது ஷமி மீண்டும் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தற்சமயம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் முகமது ஷமி தவறவிட்டுள்ளார். 

முகமது ஷமியின் இடத்தை நிரப்பும் விதமாகவே ஹர்ஷித் ரானா மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு கூடுதல் வீரர்கள் வரிசையிலும் முகேஷ் குமார், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அஹ்மத் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இருப்பினும் முகமது ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் அணில் இல்லாதது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 229 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Also Read: Funding To Save Test Cricket

ரிஸர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அஹ்மத்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை