பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!

Updated: Wed, Nov 15 2023 20:55 IST
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்! (Image Source: Google)

நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடிய பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 லீக் போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்தது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி தொடர்ந்து 8ஆவது முறையாக உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது.

அதை விட கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகவும் வரலாற்றில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் எதிர்பார்த்ததை விட பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சுமாராக செயல்பட்டது. அதனால் லீக் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி ஏராளமான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தது.

மேலும் இந்த தோல்விகளுக்கு பாபர் அசாம் கேப்டனாக சுமாரான முடிவுகளை எடுத்ததும் பேட்ஸ்மேனாக பெரிய ரன்கள் குவிக்க தவறியதும் முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்த நிலையில் நாடு திரும்பியதும் அதைப்பற்றி முடிவெடுக்க உள்ளதாக பாபர் அசாம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பாகிஸ்தானை வழி நடத்துவதற்காக தமக்கு கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மத்தியில் சோகத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூதும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்காக கேப்டன் யார் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை