தோனி வெற்றிகரமான ஃபினிஷராக இருபதற்கு இதுதான் காரணம்- ஷேன் வாட்சன்!

Updated: Fri, Apr 14 2023 12:58 IST
Shane Watson Applauds MS Dhoni’s Unique Approach To Finishing Run-Chases (Image Source: Google)

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் மிக முக்கியமானவராக இருந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி. கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் பல சாதனைகள் படைத்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் செய்து வந்த தோனி, கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு பினிஷர் ஆக செயல்பட்டு வந்தார்.டாப் 4 பேட்ஸ்மேன் ஆக இருந்து வந்த போதும், பினிஷிங் ரோலில் விளையாடிய போதும் வெற்றிகரமாகவே திகழ்ந்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளிலும் பல வருடங்களாக இந்த ஃபினிஷிங் ரோலை வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். வெற்றிகரமான கேப்டனாகவும் பினிஷர் ஆகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் 2018 -2020 ஆண்டுகளில் சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தோனி குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். தோனி எப்படி இவ்வளவு வெற்றிகரமான ஃபினிஷராக இருக்கிறார்? அவரிடம் எந்த வித்தியாசமான பழக்கம் இந்த வெற்றிக்கு காரணம்? என்பது குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “வழக்கமாக ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்படும் அட்வைஸ், ஆரம்பத்தில் இறங்கினாலும் மிடில் பேட்ஸ்மேன் ஆக இறங்கினாலும் போட்டியை முடித்துக் கொடுக்கும் அளவிற்கு திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்பார்கள். அதேநேரம் போதுமானவரை கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்லாமல் முன்னரே பினிஷ் செய்ய வேண்டும் என்பார்கள்.

ஆனால் தோனியிடம் இருக்கும் வித்தியாசமான பழக்கம் போட்டியை கடைசிவரை எடுத்துச் செல்லவேண்டும் என்பது. அப்போதுதான் பவுலர்கள் பதட்டத்தில் பல தவறுகளை செய்ய நேரிடும் அந்த தவறுகளின் மூலம் நாம் வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என்பது. நான் அதுவரை கேள்விப்படாத ஒரு அணுகுமுறையாக இது இருந்தது. தோனி அதில் வெற்றிகரமாகவும் செயல்பட்டு இருக்கிறார். சமீப காலமாக பல கேப்டன்கள் தோனியை பின்பற்றி இந்த அணுகுமுறைக்கு வந்திருக்கின்றனர்.

மிகச் சிறந்த உடல் தகுதியுடன் தோனி இருக்கிறார். இதுதான் அவரது கடைசி ஐபிஎல் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் மூன்று நான்கு வருடங்கள் அவரால் விளையாட முடியும். கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு இன்னும் சிறந்த உடல் தகுதியுடன் தெரிகிறார். காலில் சில பிரச்சனைகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு விரைவில் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று எண்ணுகிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை