வங்காதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிவரும் அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பர்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் அடங்கிய வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்றைய தினம் அறிவித்தது.
அதன்படி நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான இந்த அணியில், தஸ்கின் அஹ்மதிற்கு ஓய்வளிக்கப்பட்டு கலீத் அஹ்மத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். ஆனாலும் இந்த அணியில் ஷாகிப் அல் ஹசனின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போட்டியுடன் வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு தொடாக்கத்தில் வங்கதேச அணியின் அனைத்து ஃபார்மெட்களுக்கும் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான வங்கதேச டெஸ்ட் அணி பாகிஸ்தானில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறும் படைத்திருந்தது.
அதன்பின் இந்திய் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுத்தோல்வி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி என அந்த அணி சறுக்கலை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் விலகுவதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு அவர் தனது முடிவை வங்கதேச கிரிக்கெட் வரியத்திடமும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: Funding To Save Test Cricket
இதுகுறித்து பிசிபி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆம், தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு அணியை வழிநடத்தத் தயாராக இல்லை என்று நஜ்முல் ஹொசைன் சாண்டோ எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து வங்கதேச டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.