ஆஃப்கானிஸ்தான் பயிற்சியாளராக ஷான் டைட் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட். ஆஸ்திரேலிய அணிக்காக 2005ஆம் ஆண்டு அறிமுகமான இவர், உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்துள்ளார்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 3 டெஸ்ட், 35 ஒருநாள், 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டைட், 95 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஷான் டைட் உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவர். மேலும் அவர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
தற்போது டி20 உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஷான் டைட்டை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரது அனுபவம் மற்றும் ஆலோசனைகள் எங்களுக்கு பெரும் உதவியாக அமையும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.