இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா - பிசிசிஐ

Updated: Sat, Jul 31 2021 10:35 IST
Shaw, Suryakumar to fly from Colombo to UK on July 31 on special provision (Image Source: Google)

இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகினர்.

இதையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டனர். ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அபிமன்யூ ஈஸ்வரனும் மெயின் அணியில் சேர்க்கப்பட்டார். பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இலங்கை தொடரை முடித்துவிட்டு, அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு செல்லவிருந்தனர். 

இந்நிலையில், இலங்கை தொடரில் விளையாடி வந்த குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இலங்கைக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளிலும் ஆடவில்லை. அந்த தனிமைப்படுத்தப்பட்ட 8 வீரர்களில், இங்கிலாந்துக்கு செல்வதாக இருந்த பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருமே அடக்கம்.

இதனால் அவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிகப்படுவார்களா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து சிறப்பு அனுமதி பெற்று சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா இருவரும் இன்று கொழும்புவிலிருந்து இங்கிலாந்து புறப்படவுள்ளனர். அங்கு அவர்கள் 3 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு இந்திய அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை