NZ vs IND: கேப்டனாக எப்படி செயல்படவுள்ளேன் என்பது குறித்து ஷிகர் தவான் விளக்கம்!

Updated: Thu, Nov 24 2022 10:58 IST
Shikhar Dhawan Ahead Of The ODI Series Against New Zealand (Image Source: Google)

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேப்டனாக எப்படி செயல்படுவேன் என்பது குறித்து ஷிகர் தவான் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கேப்டனாக நீங்கள் பதவியேற்கும் போது உங்களுக்கு நிறைய பொறுப்புகள் வருகிறது. நான் எப்போதுமே அணியில் உள்ள வீரர்களிடம் சகஜமாக பேசி பழகுவேன். அதுதான் என்னுடைய இயல்பு. இது கேப்டனாக எனக்கு நல்ல பலனை கொடுத்து இருக்கிறது. என்னுடைய முக்கிய பலமே நான் நெருக்கடியான கட்டத்தில் பதற்றம் இல்லாமல் இருப்பேன். இப்படி இருக்கும் போது உங்களால் அணியை நிர்வகிக்க முடியும். ஆட்டத்தில் தவறுகள் நடக்கத்தான் செய்யும் .அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர உங்கள் மீது நீங்கள் அழுத்தத்தை போட்டுக் கொள்ளக் கூடாது.

எனக்கு கேப்டன் பதவி அவ்வப்போது கிடைக்கிறது. அதை நினைத்து எனக்கு மகிழ்ச்சி தான். ஆட்டத்தில் என்ன நடக்கிறது எப்படி யுத்திகளை அமைக்க வேண்டும் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதெல்லாம் நீங்கள் அதிகமாக விளையாடும் போது தான் உங்களுக்கு கிடைக்கும். எனக்கு தற்போது இந்த நம்பிக்கை வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பந்துவீச்சாளர் அதிகமாக ரன் கொடுத்தால் கூட அவர் என்ன நினைப்பாரோ என்று அவருக்கான ஓவரை கொடுத்து விடுவேன்.

ஆனால் இப்போது அந்த தவறை நான் செய்வதில்லை. நான் ரன்களை அதிகம் கொடுக்கும் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதை எல்லாம் இப்போது யோசிக்க மாட்டேன். அணியில் நல்லதுக்காகவே கேப்டன்கள் முடிவெடுக்க வேண்டும். இனிவரும் தொடர்களில் கேப்டனாக நான் கடுமையான முடிவை எடுப்பேன். ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்காக விளையாடினால் , நம்மீது அது அழுத்தத்தை உருவாக்கும்.

நாம் சரியாக விளையாடினால் ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் நம்முடைய குறிக்கோளுக்கு மாறாக சொதப்பினோம் என்றால் அது தேவையில்லாத பிரச்சனையை மனதளவில் உருவாக்கும். அழுத்தத்தில் நீங்கள் இருந்தால் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாது. அதனால் நீங்கள் எப்போதும் சாதாரணமாக அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் செய்ய வேண்டியதை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுதான் என்னுடைய மந்திரம். பேட்டிங்கில் என்னுடைய ஸ்ட்ரைக் ரெட்டை நான் அதிகப்படுத்த வேண்டும் என நான் கடுமையாக உழைத்து இருக்கிறேன்.

டி20 , ஒருநாள் கிரிக்கெட் என்ன எந்த போட்டியில் இருந்தாலும் சரி சூழலுக்கு தகுந்தார் மாதிரி தான் விளையாட வேண்டும்.ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் , அங்கு போய் அதிரடியாக ஆடி ஆட்டம் இழப்பதில் இந்த பயனும் இல்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2014 ஆம் ஆண்டு எனக்கு பாதி தொடரில் தான் கேப்டன் பதவி கொடுப்பார்கள் என்று எனக்கு தெரிந்தால் நான் அதனை ஏற்று இருக்க மாட்டேன். ஆனால் நான் அழுத்தத்தில் இருப்பதாக நினைத்து கேப்டன் பதவியில் இருந்து என்னை மாற்றினார்கள். அது அவர்களுடைய விருப்பம் .இப்போது நான் அமைதியாகவும் சாந்தமாகவும் களத்தில் இருப்பதால் அனைத்து சூழலில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் ” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை