உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலை வைத்து ஷிகர் தவான் பகிர்ந்த பதிவு!

Updated: Thu, Oct 26 2023 13:22 IST
உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலை வைத்து ஷிகர் தவான் பகிர்ந்த பதிவு! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 24 லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் டாப் இடங்களை பிடித்து அசத்தி வருகின்றன. ஆனால் அடித்து நொறுக்கி அபாரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆரம்பத்திலேயே 3 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறியது அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.

அதே போல பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்தில் வெற்றிகரமாக தொடங்கினாலும் அதன் பின் 3 தோல்விகளை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்தை விட்டு கீழே சரிந்துள்ளது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே சில தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தில் தடுமாறினாலும் தற்போது அடுத்தடுத்த வெற்றிகளுடன் டாப் 4 இடங்களுக்குள் நுழைந்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

இதற்கிடையே வலுவான தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த நெதர்லாந்தும் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் தோற்கடித்த ஆஃப்கானிஸ்தானும் மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அதில் 2 வரலாற்று வெற்றிகளை பதிவு செய்த ஆஃப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்புக்கு தொடர்ந்து போராடி வருகிறது.

எது எப்படி இருந்தாலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் முதல் 5 போட்டிகளிலும் தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்து முதலிடத்தை பிடித்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த 4 போட்டிகளில் 2 – 3 வெற்றிகளை பதிவு செய்தாலே இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் புள்ளி பட்டியல் மாற்றம் அடைந்து வருவதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். அதனால் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய டாப் 3 அணிகளில் ஏதேனும் ஒன்று கடைசி நேரத்தில் திடீரென வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து தனது சமூக வலைதளபதிவில்  “இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த போதிலும் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியும் புள்ளி பட்டியலை மாற்றியமைக்கிறது. தற்போது 4ஆவது இடத்திற்கு ரன் ரேட் கிராக்கியுடன் நிறைய போட்டி காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்று அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போனால் ஆச்சரியமாக இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ரசிகர்களே? உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை