இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த ஷிகர் தவான்!

Updated: Wed, Aug 17 2022 13:09 IST
Image Source: Google

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியில் நடைபெற்று வரும் மாற்றம் சிறப்பாக அமைந்திருக்கிறது. சீனியர்களுக்கு பதிலாக களமிறங்கும் இளம் வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்கள் விளையாடுவதால் சர்வதேச போட்டியில் அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் முழு உத்வேகத்துடன் விளையாடுகிறார்கள்.

ஜிம்பாப்வே கடந்த சில காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். சமீபத்தில் கூட வங்கதேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் வென்றுள்ளனர். சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஒரு அணி வெற்றி பெற முடியும். இதனால் ஜிம்பாப்வே அணியை யாரும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. ஜிம்பாப்வே அணியை வீழ்த்த கொஞ்சம் போராடி தான் ஆக வேண்டும்.

இது நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல விஷயம் தான். இந்திய அணிக்கு கே எல் ராகுல் திரும்பி, அணியை வழிநடத்துவது மிகவும் நல்ல விஷயம். கேஎல் ராகுல் இந்திய அணியின் ஒரு முக்கியமான வீரர். ஆசிய கோப்பை நடைபெறுவதால் இந்த தொடர் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். இதில் அவர் சிறப்பாக விளையாடுவார் என நான் நம்புகிறேன். இந்த தொடர் அவருக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

ஒரு நாள் போட்டி கிரிக்கெட்டின் சிறந்த வடிவமாக நான் கருதுகிறேன். இதில் எப்போது அடித்து ஆட வேண்டும், எப்போது தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என வீரர்களை சோதிக்கும் திறன் இருக்கிறது. எடுத்த உடனே அடித்து ஆட வேண்டும் என்ற நெருக்கடி ஒரு நாள் கிரிக்கெட்டில் கிடையாது. நான் ஒரு நாள் போட்டியை மகிழ்ச்சியாகவே எண்ணி விளையாடி வருகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த பேட்டியின் மூலம் ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என இளம் வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ள ஷிகர் தவான், கே எல் ராகுலுக்கு இது முக்கியமான தொடர் என மறைமுகமாக பேட்டியின் மூலம் அழுத்தம் கொடுத்து இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.இதற்கு காரணம் ஜிம்பாப்வே தொடரில் முதலில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது ஷிகர் தவான் தான். பிறகு கே எல் ராகுல் முழு உடல் தகுதியை பெற்றதும் அவரை நீக்கிவிட்டு ராகுலை கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டும் விதமாகவே தவான் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை