ஆஸியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்தது இந்தியா!

Updated: Wed, Oct 12 2022 09:51 IST
Shikhar Dhawan-led Team India matches Australia’s world record with 7-wicket win over South Africa i (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. அதனால் 1 – 1 என்ற கணக்கில் சமநிலை பெற்ற அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. 

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் தரமான வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 27.1 ஓவரில் வெறும் 99 ரன்களுக்கு சுருண்டது. குயின்டன் டி காக் 6, டேவிட் மில்லர் 7 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸின் 34 ரன்களை எடுத்தார். மறுபுறம் அந்த அளவுக்கு அற்புதமாக பந்து வீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சபாஷ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 

அதை தொடர்ந்து 100 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களில் அவுட்டாகி நடையை கட்டிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் சுப்மல் கில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்து வெற்றியை உறுதி செய்து 8 பவுண்டரியுடன் 49 ரன்களில் அவுட்டாகி அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார். இறுதியில் ஸ்ரேயஸ் அய்யர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 28* (23) ரன்கள் குவித்து ஃபினிசிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 105/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. 

இந்த சுற்றுப் பயணத்தில் முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றதால் இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் அணி களமிறங்கியது. அதில் முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் கொதித்தெழுந்து அற்புதமாக செயல்பட்ட இளம் அணி முதன்மையான வலுவான தென் ஆப்பிரிக்க அணியை தோற்கடித்து தங்களை ஏராளமான உலகத்தரம் வாய்ந்த இளம் வீரர்களைக் கொண்ட அணி என்றும் சொந்த மண்ணில் கில்லி என்றும் நிரூபித்துள்ளது. 

அதை விட இந்த இளம் அணிக்கு எதிராக 99 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 1997இல் நைரோபி நகரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவை 100 ரன்களுக்குள் சுருட்டிய முதல் ஆசிய அணி என்ற சாதனையும் இந்தியா படைத்துள்ளது. அது போக இபோட்டியில் 19.1 ஓவரிலேயே வென்ற இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை மீதம் வைத்து பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. 

மேலும் யானைக்கும் அடி சறுக்கியதை போல் சமீபத்திய ஆசிய கோப்பையை தவிர்த்து இந்த வருடம் 3 வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்ற கிட்டத்தட்ட அத்தனை தொடர்களையும் வென்ற இந்தியா ஒட்டு மொத்தமாக இதுவரை 38 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் உலக சாதனையையும் இந்தியா சமன் செய்துள்ளது அசத்தியுள்ளது. 

  • இந்தியா : 38* வெற்றிகள் (57 போட்டிகளில்), 2022*
  • ஆஸ்திரேலியா : 38 வெற்றிகள் (47 போட்டிகளில்), 2003
  • இந்தியா : 37 வெற்றிகள் (53 போட்டிகளில்), 2017
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை