இந்திய அணியை மீண்டும் வழிநடத்தும் ஷிகர் தவான்!

Updated: Fri, Jun 30 2023 11:17 IST
Shikhar Dhawan likely to captain and VVS Laxman likely to coach Indian team in Asian Games! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் துரதிஷ்டவசமான வீரர் என்றால் அது ஷிகர் தவானாகத்தான் இருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 40க்கும் மேல் ரன் சராசரி வைத்திருக்கும் பொழுதே அந்த கிரிக்கெட் வடிவத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்ட காலத்தில் உலக டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர்களில் தென் ஆபிரிக்காவின் டீன் எல்கர் மட்டுமே 40க்கும் மேலான ரன் சராசரி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ச்சியாகக் குறைந்தபட்சம் 400 ரன்கள் மேல் எடுத்தும் இந்திய டி20 அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். இதற்கு அடுத்து டி20 உலக கோப்பைக்கு முன்பாக வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தினார். பின்பு டி20 உலக கோப்பை தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து சென்ற இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

ஆனால் இதற்கு அடுத்து ஷிகர் தவான் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது இடத்தில் ஷுப்மன் கில் தொடர, இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. தற்பொழுது மீண்டும் ஒரு திருப்பமாக ஷிகர் தவானை இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ஆலோசித்து வருகிறது பிசிசிஐ. தற்பொழுது இது ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது.

செப்டம்பர் இறுதியில் ஆரம்பித்து அக்டோபர் எட்டாம் தேதி வரையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடக்கிறது. இதில் டி20 வடிவத்தில் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்று இருக்கிறது. இதற்கு வழக்கமாக விளையாடுகின்ற வீரர்களைக் கொண்டு அணியை அனுப்புவதில் பெரிய சிக்கல் இருக்கிறது. இந்திய டி20 அணியின் கேப்டன் ஹரிதிக் பாண்டியா உலகக் கோப்பைக்கான தயாரிப்பில் இருப்பார். எனவே இப்படி ஒரு முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை