ஜோஸ் பட்லர் சதத்தை கொண்டாடிய ஷிம்ரான் ஹெட்மையர்; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலியின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். மேலும் இது ஜோஸ் பட்லரின் 100ஆவது ஐபிஎல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியில் ஜோஸ் பட்லர் சதமடித்ததை ஒட்டுமொத்த அணியின் கொண்டாடினர்.
அந்தவகையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஜோஸ் பட்லர் 94 ரன்களுடன் பேட்டிங் செய்து வந்தார். இன்னிங்ஸின் கடைசி ஓவரை கேமரூன் க்ரீன் வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஜோஸ் பட்லர் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், ஐபிஎல் தொடரில் தனது 6ஆவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார்.
இதன்மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது வெற்றியைப் பெற்றதுடன், ஜோஸ் பட்லரின் சதமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் எதிர்முனையில் இருந்த ஷிம்ரான் ஹெட்மையர், ஜோஸ் பட்லர் சதமடித்ததை கொண்டாடும் விதமாக எகிறிகுதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதேப்போல் ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியும் பட்லரின் சதத்தை கொண்டாடினர். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.