இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி 9 ரன்களிலும், ரிஷப் பந்த் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் இணைந்த ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 23 ரன்கள், ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றியும், அக்ஸர் படேல் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடிவருகிறது. இந்நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் கிறிஸ் ஜோர்டன் தனது பந்துவீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
அதன்படி இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டன், அந்த ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர்களைக் கொடுத்திருந்தாலும் 4ஆவது பந்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டையும், 5ஆவது பந்தில் ஷிவம் தூபேவின் விக்கெட்டையும் கைப்பற்றி கம்பேக் கொடுத்திருந்தார். இந்நிலையில் கிறிஸ் ஜோர்டன் விக்கெட்டுகளை வீழ்த்தி காணொளி வைரலாகியுள்ளது.