டி20 உலகக்கோப்பை அணியில் ஷிவம் தூபேவுக்கு இடமுண்டா? - ராகுல் டிராவிட் பதில்!

Updated: Fri, Jan 19 2024 17:35 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 தொடரை என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக பெங்களூருவில் ரசிகர்களுக்கு உச்சகட்ட த்ரில்லர் விருந்து படைத்த 3ஆவது போட்டியில் கடுமையாக போராடிய ஆஃப்கானிஸ்தானை இரட்டை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்து கோப்பையை வென்றது மறக்க முடியாததாக அமைந்தது.

மேலும் வரும் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, ரவி பிஸ்னோய் போன்ற இளம் வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். அதில் மொத்தம் 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த ஷிவம் துபே ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

கடந்த 2019இல் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் தோனி தலைமையிலான சென்னை அணியில் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பினார். அதன் காரணமாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 வருடங்கள் கழித்து தேர்வாகி தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் தொடர் நாயகன் விருது வென்று கம்பேக் கொடுத்துள்ளார்.

அதனால் அடிக்கடி காயத்தை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இவரை தேர்வு செய்யலாமே என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார். அதனால் 2024 உலகக் கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் வைத்துள்ளதாகவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த தொடரில் அவர் தன்னுடைய கையை உயர்த்தி “பாருங்கள். என்னிடம் இந்த திறமைகள் இருக்கிறது. அது போன்றவற்றை நீங்கள் எதிர்பார்த்தால் அதை செய்யக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது” என்பதை எங்களுக்கு காண்பித்துள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை அவர் எங்களுக்கு காண்பித்தார்.

அதே போல பந்து வீச்சிலும் அவர் ஒரு சில நல்ல ஓவர்களை வீசினார். குறிப்பாக பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் மறக்க முடியாத நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் பாடங்களையும் கற்றுள்ளார்” என்று கூறியுள்ளார். இதனால் 2024 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் துபே அசத்தும் பட்சத்தில் உலகக் கோப்பை விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகும் என்று சொல்லலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை